‘லக்கேஜ்’ தூக்குவது போல் நடித்து 6 ஆண்டுகளாக திருடிய ரயில்வே ஊழியர் கைது -  250 பைகள், 30 பவுன் நகை மீட்பு


கைது செய்யப்பட்ட செந்தில் குமார் திருடிய பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்

மதுரை: ரயில் நிலையங்களில் லக்கேஜ் தூக்குவது போன்று நடித்து 6 ஆண்டாக பயணிகளிடம் பைகள் திருடிய ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மதுரை ரயில்வே நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன்பாக ரயிலில் பயணிக்க மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். அவருக்கு உதவிபுரிவது போன்று நடித்து மூதாட்டியின் பையை ஒருவர் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த பையில் 15 பவுன் தங்க நகைகள் இருந்ததாக கூறிய மூதாட்டி மதுரை ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவிபதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். மூதாட்டிக்கு உதவுவது போன்ற வந்த நபர் பையை எடுத்துச் செல்வது தெரிந்தது.

அந்த நபர் குறித்து நடத்திய தீவிர விசாரணையில், அவர் ஈரோடு ரயில்வே துறையில் மெக்கானிக் பிரிவில் உதவியாளராக பணிபுரியும் செந்தில்குமார் (42) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி ரயில்வே இருப்புப் பாதை எஸ்பி ராஜன் உத்தரவின்பேரில், டிஎஸ்பிக்கள் காமாட்சி, சக்ரவர்த்தி தலைமையில் எஸ்ஐக்கள் ஜெயபிரிட்டா, செல்லபாண்டியன் உள்ளிட்ட தனிப்படையினர் செந்தில்குமாரை பிடித்தனர்.

விசாரணையில், அவர் மதுரை எச்எம்எஸ் காலனி பகுதியில் குடும்பத்தினருடன் தங்கி இருப்பது தெரிந்து வீட்டை ஆய்வு செய்தனர். அங்கு ரயில் பயணிகளிடம் திருடிய சுமார் 250-க்கும் மேற்பட்ட திருட்டு பைகள் அடுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல ஈரோடு பகுதியில் அவர் தங்கியிருந்த அறையை ஆய்வு செய்தபோது, அங்கிருந்தும் சில திருட்டு பைகளும் மீட்கப்பட்டன. அவரிடம் இருந்து 250 பைகள் மற்றும் 30 பவுன் நகைகள், 30 செல்போன்கள் , 9 லேப்டாப்கள், 2 ஐபேட் , செல்போன் சார்ஜர் , ஹெட்செட், காலணி உள்ளிட்ட திருட்டு பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். செந்தில்குமாரை கைது செய்த மதுரை ரயில்வே போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,‘கடந்த 6 ஆண்டாக மதுரை, கரூர், விருதாச்சலம், ஈரோடு, நெல்லை போன்ற பல்வேறு ரயில் நிலையங்களில் தனியாக செல்லக்கூடிய ரயில்வே பயணிகளை குறிவைத்து அவர்களது லக்கேஜ்களை தூக்கிச் சென்று உதவி புரிவது போன்று நடித்து கைவரிசை காட்டி இருக்கிறார். அவர் திருடிய பைகள், நகைகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை மதுரை வீட்டிலும், ஈரோட்டில் அவர் தங்கியிருந்த அறையிலும் பதுக்கி வைத்திருந்தார். அவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளோம். செந்தில்குமாரின் திருட்டு செயலுக்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்,’ என்றனர்.

x