திருச்சி விமானத்தில் சாக்லேட் டப்பாவில் கடத்தி வரப்பட்ட 2,447 அபூர்வ வகை ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்


ஆமைகள் கடத்தி வரப் பயன்படுத்தப்பட்ட சாக்லேட் டப்பாக்கள்.

திருச்சி: கோலாலம்பூரிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 2,447 அபூர்வ வகை ஆமைக்குஞ்சுகளை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலேசியா தலைநகரம் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட மலிண்டோ (பேட்டிக்) விமானம் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் பயணிகளின் உடமைகளை திருச்சி சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை பரிசோதித்தனர்.

அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த எட்டு சாக்லேட் டப்பாக்களை சோதித்தபோது, உள்ளே ஏதோ முண்டிக்கொண்டிருப்பது போல உணர்ந்த வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள், அந்த டப்பாக்களை திறந்து பார்த்து போது, உயிருடன் ஆமைக்குஞ்சுகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மொத்தம் 2,447 பச்சை நிற அபூர்வ வகை ஆமைக்குஞ்சுகள் இருந்தன. ஆமைக்குஞ்சுகளை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள், திருச்சி வனத்துறை (வன உயிரியல் துறை) அலுவலர்களிடம் ஒப்படைத்து, மீண்டும் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து ஆமைக்குஞ்சுகளை கொண்டு வந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன வகை ஆமை? - சிவப்பு காது ஸ்லைடர் அல்லது சிவப்பு காதுகள் கொண்ட டெர்ராபின் (டிராகெமிஸ் ஸ்கிரிப்டா எலிகன்ஸ்) என்ற ஆமையினமாகும். இது எமிடிடே குடும்பத்தைச் சேர்ந்த அரை நீர்வாழ் ஆமை ஆகும். சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் மத்திய மேற்கு அமெரிக்காவிலிருந்து வடக்கு மெக்சிகோ வரை பூர்வீகமாக கொண்டது. இந்த வகை ஆமைகள் செல்லப்பிராணிகளாக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகின்றன.

x