கோத்தகிரியில் 100 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்


கோத்தகிரி: கோத்தகிரியில் 100 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தெரிவித்தார்.

நீலகிரி மாட்டத்துக்கு சமீபகாலமாக அண்டை மாநிலமான கர்நாடக பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் சில வகையான புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. போலீஸார் வாகன சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோத்தகிரி காவல்துறையினர் ராம்சந்த் பகுதியில் இன்று வாகன சோதனை மேற்கொண்டனர். அதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த பிக்கப் வாகனத்தில் 101 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், பான் மசாலா உட்பட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் அந்த வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த யாக்கியாவுதீன் மற்றும் கோத்தகிரி ஒரசோலை பகுதியை சேர்ந்த பாலமுருகன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மைசூரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக கோத்தகிரி வந்ததாகவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய இந்த புகையிலைப் பொருட்களை கொண்டு வந்ததாக ஒப்புக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் கோத்தகிரி நகர காவல்துறையினரின் இந்த செயலை பாராட்டி கடத்தல் பொருட்களை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா வழங்கினார்.

பின்னர் அவர் கூறும் போது, "காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகள் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விநியோகம் செய்யப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டு இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காவல்துறையினரால் மட்டுமே போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க முடியாது.

ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டால் போதைப்பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க முடியும். பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் ஒவ்வொரு வாரமும் அந்தப் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலைய துணை ஆய்வாளர் தலைமையில் சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

x