செங்கல் சூளை தொழிலாளி வெட்டி கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை @ குன்றத்தூர்


உயிரிழந்த ராஜேஷ்

குன்றத்தூர்: குன்றத்தூரில் செங்கல் சூளை தொழிலாளியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30), இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு இரண்டு வயது மற்றும் பத்து மாதக் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவர்களது பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களின் கடனை தீர்ப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளையில் பணிபுரிய வந்துள்ளார்.

நேற்று (திங்கள்கிழமை ) இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டி உள்ள பகுதியில் இயற்கை உபாதை கழிக்க ராஜேஷ் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரிடம் செல்போனை கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். செல்போனை கொடுக்க ராஜேஷ் மறுத்ததையடுத்து ஆத்திரமடைந்த மர்ம கும்பல் கத்தியை வைத்து அவரது தலை மற்றும் கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றுள்ளது.

இதையடுத்து ரத்தக்காயங்களுடன் மயங்கிய ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பதை குறித்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல் சூளையில் பணி புரிந்து வந்த நபர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு செல்போன் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த செங்கல் சூளை அமைந்துள்ள பகுதியில் உரிய பாதுகாப்புகள் இல்லை என்றும் இங்கு பணிபுரிபவர்கள் சற்று அச்சத்துடன் பணிபுரிந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.