தமிழக காவல்துறையினரையே தாக்கும் வடமாநிலத்தவர்களின் அராஜகம்: வேல்முருகன் எச்சரிக்கை


சென்னை: தமிழ்நாட்டில் தமிழக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த வடமாநில கும்பல்கள், எவ்வித அச்சமுமின்றி காவல்துறை மீதே தாக்குதல் நடத்தி வருவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் வன்முறையும், அராஜகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் தமிழர்களின் மீது தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக இருக்கிறது.

இவ்விவகாரங்களில் எல்லாம் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் எவ்வித நடவடிக்கையால் அலட்சியம் காட்டியதால், தற்போது வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல், தமிழ்நாடு காவல்துறை மீது தாக்குதல் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த கும்பல் ஒன்று, தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்திருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காரைக்காடு சோதனைச்சாவடி அருகே வரும் போது, அவர்கள் வந்த வாகனத்தை, தமிழ்நாடு மதுவிலக்கு காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர். அப்போது, வாகனத்தில் மது போதையில் இருந்த வடமாநில கும்பல், காவலர்கள் சுகனேஸ்வரர், செந்தில்குமார் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அப்பகுதி கிராம மக்கள் விரைந்து வந்து தாக்குதலை தடுத்து நிறுத்தியதால், காவலர்கள் வெறும் காயத்துடன் தப்பித்திருக்கின்றனர்.

சோதனைச்சாவடியில் நடத்தப்படும் சோதனையானது இயல்பானதே. பிற மாநிலங்களில் இருந்து வரும் சட்ட விரோதமான பொருட்களை தடுக்கும் நோக்கத்துடன் சோதனையிட்ட காவலர்கள் மீது வடமாநில கும்பல் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில், வடமாநில இளைஞர்கள் காவல் ஆய்வாளர் உட்பட ஏழு தமிழ்நாடு காவல் துறையினரைக் கடுமையாகத் தாக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு கட்டுக்கடங்காத வன்முறையில் ஈடுபட்டனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை, வடமாநில தொழிலாளர்கள் ஓடஓட விரட்டியதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சென்னை அம்பத்தூரில் வடமாநிலத் தொழிலாளர்களிடையே ஆயுதபூஜை அன்று, மது போதையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற தமிழ்நாட்டு காவலர்களை வட மாநிலத்தவர் கட்டையாலும், கற்களாலும் கொடூரமாகத் தாக்கியிருந்தனர்.

தமிழ்நாட்டில் தமிழக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த வடமாநில கும்பல்கள், எவ்வித அச்சமுமின்றி காவல்துறை மீதே தாக்குதல் நடத்தி வருவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து, எதிர் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் என்பதை கவனத்தில் கொண்டு, காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய உத்தரப்பிரதேச கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற கடந்த 9 ஆண்டுகளில் இத்தகைய வடவர் திணிப்பு லட்சக்கணக்கில் பல மடங்கு வீரியமாக அதிகரித்துள்ளது. இது, எதிர்காலத்தில், தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் முயற்சி என்பதோடு, இந்துத்துவத்தைத் தமிழ் மண்ணில் விதைத்து, தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறும்.

இந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற மனிதகுல விரோத கும்பலின் சதித்திட்டங்களை புரிந்துகொண்டு, வடமாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டை முதல் வாக்காளர் அட்டைகளை திரும்ப பெற வேண்டும். எதிர் வரும் காலத்தில், அவ்வாறு தரக்கூடாது.

வெளியார் வெள்ளம் இதே அளவுக்குத் தமிழ்நாட்டில் அன்றாடம் புகுந்தால், பின்னர் தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இருக்காது. இந்திக்காரர்களின் மாநிலமாகவோ, கலப்பின மண்டலமாகவோ மாறிவிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

எனவே, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், வெளிமாநிலத்தவர்கள் சென்று தங்க, அம்மாநிலங்களின் உள் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இந்த சட்டம் தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எதிர் வரும் சட்டமன்றத்தில் இதற்கான சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது' எனத் தெரிவித்துள்ளார்

x