கரூர் வெண்ணெய்மலை கோயில் இடத்தில் 11 ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைப்பு!


கரூர்: கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் இடத்தில் உள்ள 11 ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.

கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சுமார் 500 ஏக்கருக்கு மேல் அப்பகுதியில் உள்ளன. இவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலிடம் நிலங்களை ஒப்படைக்கும் நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக அப்பகுதியில் இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என அறிவிப்புகள் வைக்கப்பட்டு 34 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம், கோயில் செயல் அலுவலர் அலுவலகம் மற்றும் கோயிலை முற்றுகையிட்டு அங்கேயே சமைத்து சாப்பிடும் போராட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக சீல் வைக்கும் நடவடிக்கைகளை ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

டிச.21ம் தேதி ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை தொடங்கியது. 4 கடைகளின் ஷட்டர்கள் அகற்றப்பட்டிருந்த நிலையில் தகரம் வைத்து அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மொத்தம் 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் இன்று (டிச. 28ம் தேதி) இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமையில் அறநிலையத்துறையினர், வருவாய்த்துறையினர், மின் வாரிய ஊழியர்கள் சீல் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஒரு ஏடிஎம் மையம் மற்றும் 10 கடைகளுக்கு சீல் வைத்து, அத்து மீறி உள்ளே நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு உடனே வெளியேற அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது. சீல் வைக்கும் நடவடிக்கைகளை அப்பகுதி மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.

x