ஆதனூர்: தாம்பரம் அருகே ஊராட்சி தலைவருடன் தொடர்பு இருப்பதாக நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தீவைத்து எரித்துக் கொல்ல முயன்ற கணவன், தன்மீதும் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஆதனூர் கிராமம் ஜெயலட்சுமி நகரில் வசிப்பவர் செந்தில்குமார் (44) டைலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (38) இவர் செங்கல்பட்டு அருகே வீராபுரம் கிராமத்தில் அங்கன்வாடி ஊழியராக பணி செய்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அனைவரும் உறங்க சென்றனர்.
அதிகாலை கணவர் மனைவி அறையில் இருவரும் இருந்த அறையில் தீப்பிடித்து எரிந்ததாகவும், அலறல் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மகள் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் தீ காயத்துடன் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் போலீஸார் விசாரணையில் செந்தில் குமார் அளித்த வாக்குமூலத்தில், மனைவியான கலையரசி என்பவர் மகேந்திரா சிட்டி அருகே உள்ள வீராபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார் என்றும், அவருக்கும் வீராபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு தொடர்பு உள்ளதாக சொல்லியுள்ளார். மேலும் தனது மனைவியான கலையரசியை கடந்த 24-ம் தேதி அன்று அங்கன்வாடி மையத்தில் இருந்து அழைத்து வர சென்ற போது அவரும், ஊராட்சி மன்ற தலைவரும் பேசிக் கொண்டிருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் தனது மனைவியின் தொலைபேசியில் உள்ள வாட்ஸ் அப் செயலியை சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் அடிக்கடி பேசி வருவதை உறுதி செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து நேற்று இரவு கூடுவாஞ்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து, 28.12.24 அன்று அதிகாலை சுமார் 02.50 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மீதும் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.