நரிக்குடி அருகே கட்சியினரிடையே கோஷ்டி மோதல்: கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட அதிமுக நிர்வாகி


விருதுநகர்: நரிக்குடி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்தவர் பூமிநாதன். இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நரிக்குடி அருகே உள்ள கச்சனேந்தலை சேர்ந்த சந்திரன் ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அதன் பிறகும் அதிமுகவைச் சேர்ந்த வாட்ஸ் அப் குழு பதிவுகளில் தன்னை நரிக்குடி மேற்கு ஒன்றியச் செயலாளர் என்றே பூமிநாதன் குறிப்பிட்டு வந்துள்ளார். அண்மையில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது ஒட்டப்பட்ட சுவரொட்டிகளிலும் பூமிநாதன் தன்னை ஒன்றியச் செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கல்விமடையை சேர்ந்த அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளர் பிரபாத்தை சந்தித்த சந்திரன், வாட்ஸ் அப் குழுவில் ஒன்றியச் செயலாளர் என பூமிநாதன் பதிவிடுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இப்பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு பிரபாத் தரப்பினருக்கும், சந்திரன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

மீண்டும் நேற்று பிற்பகல் கல்விமடையில் உள்ள பிரபாத் வீட்டுக்கு சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிரபாத் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் அங்கிருந்து சிதறி ஓடினர்.

தகவலறிந்த அ.முக்குளம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், பிரபாத் வைத்திருந்தது உரிமம் பெற்ற துப்பாக்கி எனத் தெரிய வந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x