மணல் கடத்தும் மாஃபியாக்களுக்கு அதிகாரிகள் உடந்தை: டிஜிபிக்கு தென்காசி காவலர் பரபரப்பு கடிதம்!


சென்னை: உயிருக்கு எந்த பாதுகாப்பும் இன்றி மணல் கடத்தும் மாபியாக்களின் பிடியில் உள்ள சிவகிரியில் தொடர்ந்து வேலை செய்யவும், அனைத்து சம்பவத்துக்கும் உடந்தையாக உள்ள அதிகாரிகளாலும் எனக்கு அச்சமாக உள்ளது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர், டிஎஸ்பிக்கு தெரிவித்தும் என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னை வேறு பணிக்கு மாற்றிவிட்டனர் என தென்காசியை சேர்ந்த முதல்நிலை காவலர் கடிதம் எழுதியுள்ளார்.

தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் அ.பிரபாகரன். இவரது, பெயரில் கையெழுத்தின்றி தமிழக டிஜிபிக்கு எழுதப்பட்ட கடிதம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ கடந்த 18-ம் தேதி சிவகிரியில் உரிய ஆவணங்களின்றி எம்.சேண்ட் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து, ஓட்டுநருடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு, ரகசிய தகவலின்பேரில் சொக்கநாதன்புதூரில் அனுமதியின்றி ஜல்லி ஏற்றி வந்த டிராக்டர், 2 மாட்டு வண்டிகளை பிடித்தேன். இது தொடர்பாக உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு காவலர் உதவியுடன் 3 பேரையும், பறிமுதல் செய்த வாகனங்களுடன் அழைத்துச் சென்றபோது, வழிமறித்த 3 பேர் கொலை மிரட்டல் விடுத்து வாகனங்களையும், பிடிபட்டவர்களையும் கொண்டுசென்றுவிட்டனர். காவல் நிலையத்தில் ஒப்படைத்த டிராக்டரையும் எடுத்துச் சென்றுவிட்டதை அறிந்து மிகுந்த அச்சத்துக்கு உள்ளானேன்.

உயிருக்கு எந்த பாதுகாப்பும் இன்றி மணல் கடத்தும் மாபியாக்களின் பிடியில் உள்ள சிவகிரியில் தொடர்ந்து வேலை செய்யவும், அனைத்து சம்பவத்துக்கும் உடந்தையாக உள்ள அதிகாரிகளாலும் எனக்கு அச்சமாக உள்ளது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர், டிஎஸ்பிக்கு தெரிவித்தும் என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னை வேறு பணிக்கு மாற்றிவிட்டனர். இது எனக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுத்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநருக்கு புகார் மனு அளித்து, பொது நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த மனுவை காவல்துறை இயக்குநருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்து குற்றவாளிகளை பாதுகாத்து, குற்றத்துக்கு உடந்தையாக உள்ளனர். காவல் பணிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அனைத்து அதிகாரிகளும் லட்சக்கணக்கில் பணத்தை வாரி குவித்து, காவலர்களை மரியாதைக்குறைவாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் 4125 காவலர்கள் சஸ்பெண்ட் செய்ததும், 344 காவலர்களை டிஸ்மிஸ் செய்ததும் மிகுந்த வருத்தமளிக்கிறது. குற்றவாளிகளுக்கு நண்பனாக விளங்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட கனிமவள கடத்தல் வாகனங்களை எடுத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x