திருவேற்காடு அருகே பெண்ணிடம் ரூ.38.17 லட்சம் பறிப்பு: 135 ஆன்லைன் மோசடி வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கைது


பிஜாய்

ஆவடி: திருவேற்காடு அருகே ஓய்வு பெற்ற கல்லூரி பெண் விரிவுரையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.38.17 லட்சம் பறித்தது தொடர்பாக இளைஞர் ஒருவரை நேற்று ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே உள்ள வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஜெனட் டெய்சி( 62). ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளரான இவரது மொபைல் எண்ணுக்கு கடந்த ஜூலை 17-ம் தேதி, மும்பை சைபர் கிரைமில் இருந்து பேசுவதாக கூறி, மர்ம நபர் ஒருவர் வீடியோ காலில் பேசியுள்ளார்.

அவர், ’’உங்கள் பெயரில், 'சிம் கார்டு' வாங்கப்பட்டு, அதன் மூலம் சமூக விரோத செயல்கள் நடைபெற்றுள்ளது. ஆகவே, உங்களின் வங்கி கணக்கு விபரங்களை கூறுங்கள். அந்த விபரங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனை செய்து, வங்கி கணக்கில் உள்ள பணம் முறையானதா? அல்லது மோசடியானதா? என்பதை கண்டுபிடிப்பார்கள்’’ என கூறி மேரி ஜெனட் டெய்சியை மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன அவர், மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு கடந்த ஜூலை 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை ரூ. 38.17 லட்சத்தை அனுப்பியுள்ளார். அவ்வாறு பணம் அனுப்பிய மேரி ஜெனட் டெய்சி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் முதல் கட்ட விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த பிஜாய் (33) என்பவரை கைது செய்தனர்.

கைதான பிஜாயிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது: “12- ம் வகுப்பு வரை படித்துள்ள பிஜாய், வேலை கிடைக்காமல், ஆன்லைன் வாயிலாக மோசடி செய்வோருடன் கூட்டு சேர்ந்து, பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக, 13 வங்கிகளில் கணக்கு தொடங்கி வங்கி, சிபிஐ அதிகாரி, மும்பை சைபர் கிரைம் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரி என கூறி பலரை ஏமாற்றியுள்ளார்.

மேலும், ஆன்லைன் பங்குச் சந்தை மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற பெயரில் பொது மக்களை ஏமாற்றி காசோலைகள் மூலம் பணத்தை பெற்று, வெளிநாடுகளில் 'கிரிப்டோ கரன்சி'யாக மாற்றி மோசடி செய்து வந்துள்ளார்.
இவ்வாறு அந்த விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், போலீஸார், பிஜாயின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, இந்தியா முழுவதும் பிஜாயின் மீது 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மோசடிக்காக பயன்படுத்திய மொபைல் போன், மடிகணினி, 9 டெபிட் கார்டுகள், 4 வெல்கம் கிட், இரு வங்கி கணக்கு புத்தகங்கள், 9 காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை பிஜாயிடம் இருந்து பறிமுதல் செய்த போலீஸார், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

x