ஆந்திரா டூ தமிழகம்: பேருந்து மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது


திருத்தணி: ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு அரசு பேருந்துகள் மூலமாக கடத்தப்பட்ட 25 கிலோ கஞ்சா கடத்தியது தொடர்பாக 4 இளைஞர்களை இன்று போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழக - ஆந்திர எல்லை பகுதிகள் வழியாக, ஆந்திர மாநிலப் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீஸார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் இன்று திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து, காஞ்சிபுரம் மற்றும் சென்னை நோக்கி சென்ற இரு அரசு பேருந்துகளை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அச்சோதனையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தினேஷ்(21), பிரதீப்குமார் (21), விஜய்(18) ஆகிய 3 பேரின் பைகளில் 16 கிலோ கஞ்சாவும், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர்(27) என்பவரின் பையில் 9 கிலோ கஞ்சாவும் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், தினேஷ், பிரதீப்குமார், விஜய் மற்றும் பாஸ்கர் ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கைதானவர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கஞ்சாவை தமிழகத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

x