சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது
கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி, கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற இரண்டு பேர், கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கி விட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது
மேலும், குற்றவாளிகள் அதனை வீடியோ எடுத்து, வெளியே கூறினால், சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை பிரிவான பி.என்.எஸ்.64 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் கோட்டூர்புரம் மண்டபம் பகுதியில் நடைபாதையில் பிரியாணி கடை வைத்திருக்கிறார்.
இவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திகிலூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஞானசேகரன் பிரியாணி கடையில் விற்பனை முடிந்ததும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காட்டுப்பகுதிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கே தனிமையில் இருக்கும் காதலர்களை மொபைலில் படம் பிடித்து மிரட்டி, மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஞானசேகரன் கடந்த 2011ஆம் ஆண்டு இதேபோன்று அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்கியது தெரியவந்துள்ளது. ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பன போன்ற தகவல்கள் தெரியவந்துள்ளது.