கீழ் கோத்தகிரியில் சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது: வனத்துறை அதிரடி


கோத்தகிரி: கீழ் கோத்தகிரியில் சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி வனக்கோட்டம் கீழ் கோத்தகிரி வனசரகம், வாகப்பனை சரிவு காப்புகாட்டில் சரக கள பணியாளர்கள் வனசரக அலுவலர் தலைமையில் ரோந்து சென்று கொண்டிருந்த போது மரம் வெட்டும் சத்தம் கேட்டு, அ்ங்கு சென்று பார்த்தனர். மரம் வெட்டியவர்களை துரத்தி பிடிக்க முயன்ற போது, அவர்கள் தப்பி சென்று விட்டனர். பின்னர் சம்பவ இடத்தை சோதனை செய்ததில் அவர்கள் வெட்டியது சந்தன மரம் என்று தெரிய வந்தது.

உடனே மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்து, அவரது உத்தரவின் படி குற்றவாளிகளை தேடும் பணி மேற்கொள்ளப் பட்டது. அதன் தொடர்ச்சியாக, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குஞ்சபனை ஊரை சேர்ந்த சிவக்குமார், சின்ராசு ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், தமிழ்நாடு வனச்சட்டம் 1882ன் படி சந்தன மர குற்றப் பதிவு செய்து குற்றவாளிகள் இரண்டு பேரையும் கோத்தகிரி நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

x