சென்னை: தகராறில் நிகழ்ந்த மோதல்; படுகாயமடைந்த நபர் உயிரிழந்ததால் கொலை வழக்குப் பதிவு


சென்னை: ஓட்டேரி பகுதியில் இரும்பு பைப்பால் தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கரிடம் அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெய்சங்கர், மணிகண்டனை திட்டியுள்ளார். உடனே மணிகண்டன் ஜெய்சங்கரின் தந்தையிடம் சென்று புகார் கூறியதின் பேரில், ஜெய்சங்கரின் தந்தை ஜெய்சங்கரை அழைத்து திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் அவரது நண்பருடன் சேர்ந்து, டிசம்பர் 21ம் தேதி அன்று மாலை சிறுவர் பூங்கா அருகில் அமர்ந்திருந்த மணிகண்டனிடம் சண்டையிட்டு தான் கொண்டு வந்த இரும்பு பைப்பால், மணிகண்டனின் தலையில் தாக்கியுள்ளனர். மேலும், மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த மணிகண்டனின் தம்பி விக்னேஷ்குமாரையும் தாக்கிவிட்டு, இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்து மயக்கமடைந்த மணிகண்டன் மீட்கப்பட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து விக்னேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், ஓட்டேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப் பட்டது. மேலும், ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட ஜெய்சங்கர், ஐசக் ஜெபகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து இரும்பு பைப் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் இன்று (25.12.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி, உயிரிழந்த நிலையில், கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

x