திருச்சியில் சோகம்: காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களில் 2 பேரின் உடல்கள் மீட்பு


திருச்சி: காவிரி ஆற்றில் நேற்று நீரில் மூழ்கிய 3 மாணவர்களில் 2 மாணவர்களின் உடல்களை தீயணைப்புத்துறையினர் இன்று மீட்டனர்.

திருச்சி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் 10 பேர் நேற்று மதியம், கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அய்யாளம்மன் காவிரி படித்துறையில் குளிக்கச் சென்றனர். அப்போது தெர்மகோல் மீது படுத்துக் கொண்டு சிலர் விளையாடினர். அப்போது நீரின் வேகம் அதிகரித்ததால், 2 பேர் நீரில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க மற்றொரு மாணவன் முயற்சித்தபோது, அவரும் சிக்கிக் கொண்டார். இவர்கள் ஆழ்வார்தோப்பு சேர்ந்த சலீம் மகன் ஜாகிர் உசேன் (15), பீமநகர் செந்தில் மகன் விக்னேஷ் (16), எடமலைப்பட்டி புதூர் செந்தில்குமார் மகன் சிம்பு (15) எனத் தெரிகிறது

ஓரளவு நீச்சல் தெரிந்த மற்ற 7 மாணவர்கள் தட்டுத்தடுமாறி நீச்சலடித்து கரை சேர்ந்தனர். தகவலறிந்த காவல்துறை ஆணையர் விவேகானந்தசுக்லா, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்கும் பணியில் நேற்று இரவு முதல் ஈடுபட்டனர்.

இன்று காலை 7 மணியளவில் ஜாகீர் உசேன் உடலை மீட்புப் படை வீரர்கள் மீட்டனர். கடும் போராட்டத்துக்குப் பிறகு இன்று மாலை 4.15 மணியளவில் சிம்புவின் உடல் மீட்கப்பட்டது. மற்றொரு மாணவர் விக்னஷை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. மீட்கப்பட்ட 2 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

x