கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சிலர் திமிங்கலத்தின் எச்சத்தை விற்பனை செய்ய கொண்டு செல்லப்படுவதாக, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகவன் ஜெகதீஷ் சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன் தலைமையிலான வனத்துறையினர், சுங்கச்சாவடி அருகே இன்று (டிச.23) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்குகிடமாக வந்த 2 பேரை பிடித்து, சோதனை செய்தனர். அவர்களிடம் திமிங்கலத்தின் எச்சம் இருந்ததை கண்டறிந்தனர். விசாரணையில், அவர்கள் அவதானப்பட்டி கிராமத்தை சேர்ந்த கரண்குமார் (24), கிருஷ்ணகிரி பழையபேட்டை அருந்ததி மாரியம்மன் கோயில் முதல் தெருவை சேர்ந்த முகமது பகாத் (23) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர்களிடம் கேட்ட போது, “கடலில் அலைகளால் கரைத்து அடித்து வரும்போது திமிங்கலத்தின் வயிற்றில் இயற்கையாகவே அம்பர்கிரிஸ் எனும் திரவம் சுரக்கிறது. இந்த திரவம் உருண்டையாக வடிவெடுக்கிறது. இந்த எச்சம் திமிங்கலம் தனது வாயில் இருந்து வாந்தியெடுக்கிறது. இதனை நெருப்பினால் சூடு காட்டினால் வாசனை வெளியேறும், மருந்து பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது” என்றனர்.
யானை தந்தத்தில் விநாயகர் சிலை: ஊத்தங்கரை பகுதியில் யானை தந்தத்தில் விநாயகர் சிலை வடிவமைத்து விற்பனை செய்யப்படுவதாக, சென்னை மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து, ஊத்தங்கரை அண்ணாநகர் 2வது தெருவில் வசிக்கும் ரஞ்சித்(41) என்பவரது வீட்டில், கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன் தலைமையிலான வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
அதில், யானை தந்தத்தில் செய்யப்பட்ட விநாயகர் சிலையை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், ரஞ்சித்தை கைது செய்தனர். இதுகுறித்து வனச்சரகர் கூறும்போது, பொதுமக்கள் யாரும் வனவிலங்குகள் சார்ந்த பொருட்கள் வாங்க வேண்டாம். இதுபோன்ற குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுவது வனஉயரின பாதுகாப்பு சட்டத்தின் 1972-ன்படி குற்றமாகும். மேலும், வனவிலங்குகள் கடத்தல் உள்ளிட்டவை குறித்து ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 1800 4255 135 என்கிற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.