கோவையில் கள்ளத் துப்பாக்கியுடன் சுற்றிய ஐடி ஊழியர் உட்பட மூவர் கைது


கோவையில் கள்ளத் துப்பாக்கியுடன் சுற்றிய ஐடி ஊழியர் உட்பட மூவரை போலீஸார் கைது செய்தனர். 

கோவை: கோவை பீளமேடு அருகே, கள்ளத் துப்பாக்கியுடன் சுற்றிய ஐடி ஊழியர் உட்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு அருகே ஒரு கும்பல், வெளிமாநிலத்தில் இருந்து கள்ளத் துப்பாக்கியை வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக, கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், மேற்கு மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், பீளமேடு மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்குரிய இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது விளாங்குறிச்சி சாலையில் உள்ள வினோபாஜி நகரில் சுற்றித் திரிந்த மூவரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீஸார் சோதனை செய்த போது, அதில் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் தங்களது இடத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்தனர். அதில் பிடிபட்டவர்கள் விளாங்குறிச்சி சாலை, சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு(22), காப்பிக்கடை ரத்தினகிரி வீதியைச் சேர்ந்த ஹரிஸ்ரீ(23), பிஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த குந்தன்ராய்(22) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதுகுறித்து இன்று (டிச.23) கோவை மாநகர போலீஸார் கூறும்போது, “மணிகண்ட பிரபு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். ஹரிஸ்ரீ, ஆக்டிங் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். ஹரிஸ்ரீக்கு தெரிந்தவர் குந்தன்ராய். குந்தன்ராய் கோவையில் தங்கி சமையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மணிகண்ட பிரபுவும், ஹரிஸ்ரீயும் சில நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி பற்றி பேசி வந்துள்ளனர்.

இதையறிந்த குந்தன்ராய், பிஹார் மாநிலம் பாட்னாவில் பணம் கொடுத்தால் கள்ளச் சந்தையில் இருந்து நவீன கள்ளத் துப்பாக்கிகளைக் கூட வாங்கலாம் எனத் தெரிவித்தார். இதையடுத்து மணிகண்ட பிரபு தனக்கு துப்பாக்கி வேண்டும் என ஹரிஸ்ரீ மூலமாக குந்தன்ராயிடம் தெரிவித்துள்ளார். அதற்காக ரூ.1.50 லட்சம் பணத்தையும், அவர்களிடம் மணிகண்ட பிரபு கொடுத்துள்ளார். தொடர்ந்து ஹரிஸ்ரீ, குந்தன்ராய் ஆகியோர் பாட்னாவுக்குச் சென்று கள்ளத் துப்பாக்கியை வாங்கியுள்ளனர். பின்னர், அதை கோவைக்கு கடத்தி வந்து மணிகண்டபிரபுவிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து மூவரும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு செல்லும் போது தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸில் பிடிபட்டுள்ளனர்.

மணிகண்டபிரபு தனது பாதுகாப்பு பயன்பாட்டுக்கு துப்பாக்கியை வாங்கியதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இவர் பயன்படுத்துவதற்கு வாங்கினரா?, விற்பனை செய்ய வாங்கினரா?, அதை வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வாங்கினரா? என தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூவரும் இன்று (டிச.23) கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, 6 தோட்டாக்கள், 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களது செல்போன் தகவல் பரிமாற்றங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன,” என்றனர்.

x