வழிப்பறி வழக்கில் கைதானவர் திருப்பூர் சிறையில் இருந்து தப்பியோட்டம் - 5 பேர் சஸ்பெண்ட்


வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்

திருப்பூர்: வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர், திருப்பூர் கிளைச்சிறையில் இருந்து தப்பியது தொடர்பாக 5 பேர் இன்று (டிச. 23) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்து முன்னணி திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் பாஸ்கர பாண்டியன் (49). இவரிடம் கடந்த மாதம் 16-ம் தேதி இரவு நல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த 2 பேர், அவரைத் தாக்கிவிட்டு, மிளகாய் பொடி தூவி அவரிடம் இருந்த 6 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். இதில் திருப்பூர் பாரதி நகரை சேர்ந்த சூர்யா (24) உட்பட இருவரை நல்லூர் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் மாவட்ட கிளைச்சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி மாலை சிறையில் கைதிகளின் வருகை பதிவை பார்த்தபோது, நகைபறிப்பு வழக்கில் தொடர்புடைய கைதி சூர்யா இல்லாதது தெரியவந்தது. அவரை சிறை வளாகத்தில் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவர் அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட, திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து மாயமான சூர்யாவை தேடி வருகின்றனர்.

சிறை வளாகத்தில் கைதி தப்பியோடிய சம்பவம் குறித்து, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் திருப்பூர் கிளைச்சிறையில் நேரில் வந்து விசாரித்தார். இந்நிலையில் பணியில் கவனக்குறைவாக இருந்தது தொடர்பாக, உதவி சிறை அலுவலர்கள் கங்காராஜன், சீதா, முதல்நிலை போலீஸார் ராஜபாண்டி, 2-ம் நிலை போலீஸார் சக்திவேல் மற்றும் ரவிக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, இன்று செந்தில்குமார் உத்தரவிட்டார்.

x