வேலூர் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர், மகன் கைது


பாலாசேட்

வேலூர்: கே.வி.குப்பம் அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நாகல் கிராம ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் அவரது மகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியம் நாகல் பகுதியைச் சேர்ந்தவர் விட்டல்குமார் (47). இவர், வேலூர் மாவட்ட பாஜக ஆன்மிக ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலாளராக இருந்துவந்தார். கே.வி.குப்பம் அடுத்துள்ள சென்னங்குப்பம் சாலையோரத்தில் கடந்த டிச.16-ம் தேதி இரவு ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். பின்னர், அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கே.வி.குப்பம் காவல் துறையினர் ஆரம்பத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், விட்டல் குமார் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். மேலும், இது தொடர்பாக விட்டல்குமாரின் மனைவி ரேவதி, தந்தை வடிவேல் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக விட்டல்குமாரின் பிரேத பரிசோதனையின் அடிப்படையின் சந்தேக மரணம் என்ற வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இதற்கிடையில், விட்டல் குமார் கொலை வழக்கு தொடர்பாக காட்பாடி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஜெயகணேசன் முன்னிலையில் கீழ்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கமலதாசன் (27) மற்றும் நாகல் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (25) ஆகியோர் நேற்று சரணடைந்தனர்.

அதே நேரம், விட்டல் குமார் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் நாகல் கிராம ஊராட்சி தலைவர் பாலாசேட் மற்றும் அவரது மகன் தரணிகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையின் முடிவில் விட்டல் குமார் கொலை வழக்கில் பாலாசேட் மற்றும் தரணிகுமாரை இன்று மாலை கைது செய்தனர். இந்த வழக்கில் பாலாசேட்டுவின் மற்றொரு மகனுக்கும் தொடர்பு இருப்பதால் அதுகுறித்தும் விசாரித்து வருகின்றனர்.

x