ஆவடி: அம்பத்தூர் பகுதியில் சாலைகளில் சென்ற 5 பேர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ரவுடி உட்பட 3 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர். சென்னை- அம்பத்தூர் தொழிற்பேட்டை, மேனாம்பேடு பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் 3 இளைஞர்கள் பட்டாக்கத்தியை சாலையில் தேய்த்தவாறு பொதுமக்களை மிரட்டி சென்றனர். மேலும், சாலைகளில் நடந்து சென்ற 5 பேரை கத்தியால் தாக்கிவிட்டு, தப்பியோடினர்.
இதில் படுகாயமடைந்த திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த நவீன் (20), பாடியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான அசன் மைதீன் (35), அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் (47), வட மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரகுமார் (35), தீபக் (27) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் சம்பவ இடங்களுக்கு விரைந்து, படுகாயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நவீன், அசன் மைதீன் உள்ளிட்ட 5 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மேனாம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டோரை தேடி வந்தனர். இந்நிலையில், 5 பேர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை, மங்களபுரம், நல்லகிணறு தெருவைச் சேர்ந்த ரவுடி நித்தியவேல் (20), மண்ணூர்பேட்டை, பிள்ளையார் கோயில், மலையத்தம்மன் கோயில் தெருக்களை சேர்ந்த லோகேஷ் (18), மணிகண்டன் (22) ஆகிய 3 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.