மனைவியைக் கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி பைகளில் கொண்டு சென்ற கணவர், தெரு நாய் கவ்வியதால் சிக்கினார்.
பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (36). கால் டாக்ஸி ஓட்டுநர். இவரது மனைவி மரிய சந்தியா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சென்னையில் வசித்து வந்த இவர்கள் இரு மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறினர்.
தூத்துக்குடியில் உள்ள மீன் நிறுவனத்தில் பணியாற்றிய மரிய சந்தியாவின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் எழுந்ததால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல, நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து நேற்று முன்தினம் இரவு அரிவாளால் வெட்டி மனைவியைக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, தண்ணீரில் கழுவி, 3 பைகளில் அடைத்து வைத்துள்ளார்.
பின்னர், அந்தப் பைகளை நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியே எடுத்துச் சென்றபோது, வீட்டு வாயிலில் நின்றிருந்த தெரு நாய் மோப்பம் பிடித்து, மாரிமுத்து வைத்திருந்த பையைக் கடித்து இழுத்துள்ளது. அவர் பயந்து ஓடவும், குரைத்தபடி அவரை விரட்டியுள்ளது.
சப்தம் கேட்டு எழுந்த அப்பகுதி மக்கள், மாரிமுத்துவை சுற்றி வளைத்து, பைகளைத் திறந்து பார்த்தபோது, அதில் மரிய சந்தியாவின் உடல் பாகங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீஸார் மாரிமுத்துவைக் கைது செய்து, பைகளை பறிமுதல் செய்தனர். ஏற்கெனவே மாரிமுத்து மீது நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் 2022-ல் நடந்த கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.