மனைவியை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை பையில் கொண்டுச்சென்ற கணவர்: குமரியில் அதிர்ச்சி


கன்னியாகுமரி: மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. உடல் பாகங்களை பையில் வைத்து கொண்டு சென்ற அவர் கைது செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (36). இவரது மனைவி மரிய சந்தியா (30). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே உள்ள பால்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். தூத்துக்குடியில் உள்ள மீன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த மரிய சந்தியா மீது கணவருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு வீட்டில் இருந்தபோது மரிய சந்தியாவிற்கும், மாரிமுத்துவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரிமுத்து ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியை வெட்டி கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து மனைவியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய மாரிமுத்து, ரத்தம் கொட்டியதால் அவற்றை தண்ணீரில் கழுவியுள்ளார். பின்னர் உடல் பாகங்களை 3 பைகளில் அடைத்து வைத்துள்ளார்.

அந்த பைகளை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது வீட்டு முன்பு நின்றிருந்த நாய் அவரை துரத்தியுள்ளது. இதை பார்த்து சந்தேகமடைந்த மக்கள் உடனடியாக மாரிமுத்துவை சுற்றி வளைத்து பேக்குகளை திறந்து பார்த்தபோது அதில், மரிய சந்தியாவின் உடல் துண்டு துண்டான நிலையி்ல இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மாரிமுத்துவை போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

x