ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மூதாட்டிக்கு உதவுவது போல் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.70 ஆயிரம் மோடி


கைதான பீட்டர் பிரபாகரன் (இடது). காட்ஜான் (வலது)

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து, ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நல்லகுற்றாலம் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராஜேஸ்வரி (62). இவர் கடந்த மாதம் 26-ம் தேதி நேதாஜி சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற போது அங்கிருந்த இரு இளைஞர்கள் உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துள்ளனர்.

அதன்பின் அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.20 ஆயிரம் பணமும், வடக்கு ரத வீதியில் உள்ள நகை கடையில் ரூ.50 ஆயிரத்திற்கு 3 தங்க நாணயங்களும் வாங்கியுள்ளனர். இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் எஸ்.பி கண்ணன் உத்தரவில் டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையிலான தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதில் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த தேவராஜ் மகன் காட்ஜான் (23), தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மோசஸ் மகன் பீட்டர் பிரபாகரன் (32) ஆகிய இருவரை தேவகோட்டையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கல்லூரியில் காட்ஜான் படித்தபோது, திருட்டு வழக்கில் கைதாகி தேவகோட்டை சிறையில் இருந்த போது பீட்டர் பிரபாகரன் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இணைந்து சினிமா பாணியில் நூதன முறையில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

x