ஜமைக்கா நாட்டில் நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர், ஜமைக்கா நாட்டின் பிராவிடன்ஸ் என்ற தீவில் உள்ள லீ ஹை ரோடு பகுதியில் `ஜேகே புட் அண்ட் சூப்பர் மார்க்கெட்' எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த விக்னேஷ்(35) சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவருடன், திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரபாண்டி, சுடலைமணி, ராஜாமணி ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்குள்ள பணம், பொருட்களைக் கொள்ளையடித்தபோது, விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி ஆகியோர் தடுத்துள்ளனர். அவர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், விக்னேஷ் மீது குண்டு பாய்ந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் சுபாஷ் அமிர்தராஜ் நேற்று காலை விக்னேஷ் குடும்பத்துக்கு தெரிவித்துள்ளார். விக்னேஷின் தந்தை நாகராஜன் மற்றும்குடும்பத்தினர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்து, கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விக்னேஷின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவ வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியர் கா.ப.கார்த்திகேயனிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு மூலம் இந்திய வெளியுறவுத் துறையை தொடர்புகொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.