சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.14.2 கோடி மதிப்புடைய, 14.4 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கென்யா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார். ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியா தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கென்யா நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் பயணி ஒருவர் சுற்றுலா விசாவில் வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரை சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
90 கேப்சூல்கள்: மேலும், அவரது வயிறு வழக்கத்துக்கு மாறாக பெரிதாக இருந்ததால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, வயிற்றுக்குள் அதிக அளவிலான கேப்சூல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண் பயணியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, இனிமா கொடுத்து வயிற்றுக்குள் இருந்த 90 கேப்சூல்களை வெளியே எடுத்தனர். அந்த கேப்சூல்களை அதிகாரிகள் உடைத்து சோதனை செய்தபோது, அது விலை உயர்ந்த கொக்கைன் போதைப்பொருள் என்பது தெரியவந்தது.
ரூ.14.2 கோடி மதிப்புள்ள 1 கிலோ 424 கிராம் எடை கொண்ட போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்து சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும், ஏற்கெனவே மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு வந்து சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் அவர்யாரிடம் போதைப் பொருளை கொடுக்க வந்தார் என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7.6 கிலோ கஞ்சா பறிமுதல்: இதேபோல், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.76 லட்சம் மதிப்புள்ள 7.6 கிலோ பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை நேற்று முன்தினம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். மேலும், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.28 கோடி மதிப்புள்ள 1.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட பயணி மற்றும் விமான கேபின் க்ரூ ஊழியர் கைது செய்யப்பட்டனர்.