விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் யானை தந்தத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள் மற்றும் டாலரை விற்பனை செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படிப்படையில் கடந்த மாதம் 13-ம் தேதி விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஒரு அறையில் இருந்த யானை தந்தத்தால் செய்யப்பட்ட விலை மதிப்பற்ற 4 யானை பொம்மைகள் மற்றும் டாலரை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து யானை தந்தத்தால் செய்யப்பட்ட யானை பொம்மைகளை விற்பனை செய்யமுயன்ற திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி, கருப்பசாமி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த முகமது ஐயாகிதீன், ராஜா, சுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஜஸ்டின், திருச்சி மாவட்டம் பேட்டவாய்த்தலை பகுதியைச்சேர்ந்த கார்த்திகேயன், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பாலமுருகன், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறைச் சேர்ந்த பிரபாகரன், தஞ்சாவூரைச் சேர்ந்த பைசல்,ராஜ்குமார், பார்த்தசாரதி ஆகிய 12 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையிலடைத்தனர்.
2.500 கிராம் எடையுள்ள ஒரு யானை சிலை உட்பட 4 யானை சிலைகள் மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட டாலர் என 6 கிலோ 500 மில்லி கிராம் எடையுள்ள கைவினைப்பொருட்கள் மற்றும் ஒரு கார், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் வனத்துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்தவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டபோது, திருச்சி ஆயுதப்படை உதவிக்காவல் ஆய்வாளர் மணிவண்ணன் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 25-ம் தேதி திருச்சி காவல்துறையினரால் திருச்சி ஆயுதப்படை உதவிக்காவல் ஆய்வாளர் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ள வனத்துறையினர் சம்மன் அனுப்பினர். அதன் பேரில் விழுப்புரம் வனத்துறை அலுவலகத்தில் ஆஜரான மணிவண்ணனை வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.