சென்னை: விமான நிலையத்தில் ரூ.1.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான ஊழியர், பயணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது.
பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு, விமானத்தின் கேபின் ஃக்ரூவான 26 வயதுடைய விமான ஊழியர் ஒருவர் பதற்றத்துடன் இருந்ததை பார்த்த மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது அந்த ஊழியர் அணிந்திருந்த பேண்ட் பெல்ட் அணியும் பகுதியில் ரூ.1.4 கோடி மதிப்புள்ள 1.7 கிலோ தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஏர் இந்தியா விமானத்தின் கேபின் ஃக்ரூ ஊழியரை கைது செய்து, விமான நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், பயணி ஒருவர் தங்கக் கட்டிகளை ஊழியரிடம் கொடுத்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்படி, குடியுரிமை சோதனை பிரிவில் நின்று கொண்டிருந்த அந்த கடத்தல் பயணியையும் அதிகாரிகள் கைது செய்தனர். இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.