மதுரை கட்டிட தொழிலாளியிடம் ரூ.5 லட்சம் ஏமாற்றிய போலி வங்கி அதிகாரி!


ஏமாந்த கொத்தனார் ஸ்ரீஹரி.

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகை ஏலம் நடப்பதாக கூறி மதுரையைச் சேர்ந்த கொத்தனாரிடம் ரூ.5 லட்சத்தை ஏமாற்றிய போலி வங்கி அதிகாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை வண்டியூரைச் சேர்ந்த ராஜா மகன் ஸ்ரீஹரி (22). கொத்தனாரான இவர் ஒரு மாதத்துக்கு முன், ஒத்தக்கடையில் உள்ள மதுக்கூடத்துக்கு சென்றபோது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சங்கர் (35) என்பவர் அறிமுகமாகினார். அப்போது தான் தேசிய வங்கி ஒன்றில் மேலாளராக இருப்பதாக சங்கர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வங்கி சார்பில் 23 பவுன் நகைகள் ஏலம் விடுவதாகவும், ரூ.5 லட்சம் இருந்தால் ஏலம் எடுக்கலாம் என்று சங்கர் கூறியுள்ளார். இதை நம்பிய ஸ்ரீஹரி வீட்டில் இருந்த தாயார் முத்துமாரி (42) நகைகளை அடகு வைத்து ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.

பின்னர் தனது தாயாருடன் ஏலம் நடப்பதாக கூறிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வாடகை காரில் வந்தார். அங்கு இருந்த சங்கர், அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்று கொண்டார். பின்னர் டீக்கடையில் முத்துமாரியை நிற்க சொல்லிவிட்டு, முதல் மாடியில் உள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் ஏலம் நடைபெறுவதாக கூறி ஸ்ரீஹரியை மட்டும் அழைத்து சென்றார்.

அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் ஸ்ரீஹரியை வெளியே நிற்க சொல்லிவிட்டு, அரங்குக்குள் சென்ற சங்கர் திடீரென மாயமானார். அதன்பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஏலம் நடைபெறவில்லை, மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் தான் பெறுகின்றனர் என்பது ஸ்ரீஹரிக்கு தெரியவந்தது. தாங்கள் ஏமாற்றமடைந்த அவர், தனது தாயாருடன் வந்து சிவகங்கை நகர் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலி வங்கி அதிகாரியான சங்கரை போலீஸார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு பல ஆயிரம் பேர் வந்திருந்த சமயத்தில் கொத்தனாரிடம் பணத்தை ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

x