ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே இரு டாஸ்மாக் மதுபான கடைகளில் சுவர்களை துளையிட்டு மதுபான பாட்டில்கள் திருடப்பட்ட வழக்குகள் தொடர்பாக 6 இளைஞர்களை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இக்கடையின் சுவரை கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் துளையிட்டு, சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 774 மதுபாட்டில்களை திருடி சென்றனர். மேலும், தாமரைப்பாக்கம் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இக்கடையின் சுவரை கடந்த 11ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் துளையிட்டு சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலன 3,130 மதுபான பாட்டில்களை திருடி சென்றனர்.
இச்சம்பவங்கள் குறித்து, வெங்கல் மற்றும் பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, திருவள்ளூர் எஸ்பி சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில், வெங்கல் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான தனிப்படை போலீஸார், டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபாட்டில்களை திருடிய நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இரு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபாட்டில்களை திருடியது தொடர்பாக, பெரியபாளையம் அருகே உள்ள மேல்செம்பேடு, பூச்சிஅத்திப்பேடு, எர்ணாகுப்பம், அலமாதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் ஆகிய பகுதிகளை சேர்ந்த பிரபாகரன் (24), சரத்குமார் என்ற வீரமணி (28), இன்னாச்சி முத்து (32), ஸ்டீபன் (30), இசக்கி துரை (30), தர்மேந்தர் (26) ஆகிய 6 இளைஞர்களை நேற்று இரவு தனிப்படை போலீஸார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து சுமார் 2,700 மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.