நந்திவரம்: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் நாராயணபுரத்தில் வசித்து வருபவர் ராஜன் (46), இவரது நண்பர் வீரபாகு நகரை சேர்ந்தவர் நாகராஜ் (47). இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (50) என்பவரிடம் நிலம் வாங்கித் தருவதாக தெரிவித்து, அவரிடம் ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டு அதே பகுதியில் லட்சுமி நகரில் ஓர் இடத்தை கடந்த 2021-ம் ஆண்டு விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையில் வேளாங்கண்ணி கடந்த மாதம் ஆன்லைன் வாயிலாக, வில்லங்கச் சான்று கேட்டு விண்ணப் பித்திருந்தார். அப்போது அதில் சரியான தகவல்கள் கிடைக்காததால் அவர் பதிவுத் துறை அலுவலகத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, இவரது கைவசம் உள்ள அனைத்தும் போலி ஆவணங்கள் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து ராஜனிடம் கேட்டபோது, அவர் அடியாட்களுடன் சென்று அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன வேளாங்கண்ணி கூடுவாஞ்சேரி போலீஸில் அனைத்து ஆவணங்களுடன் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்
கொண்டனர்.
வெளிநாட்டில் வசிக்கும் நில உரிமையாளர்களின் இடங்களை அடையாளம் கண்டு, அந்த ஆவணங்களை போலியாகத் தயார் செய்து, அதை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதை இவர்கள் வாடிக்கையாக வைத்திருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. எனவே ராஜன் மற்றும் அவரது நண்பர் நாகராஜ் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.