சென்னை: தனியார் பைக் டாக்ஸி ஓட்டுநரிடம் கத்தி முனையில் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் முத்து (25). மெக்கானிக்.
இவர் பகுதிநேரமாக தனியார் பைக் டாக்ஸி நிறுவனத்தில் தனது பைக் வைத்து பணி செய்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 12-ம் தேதி காலை 7 மணியளவில் ஆலந்தூர், மெட்டோ ரயில் நிலையம் அருகில் தனது பைக்குடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 3 பேர் முத்துவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து பைக்கை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், கத்தி முனையில் பைக்கை பறித்து சென்றது முகலிவாக்கம் அருகே உள்ள தண்டுமா நகர் தினேஷ் என்ற கருப்பா (23), ஆலந்தூர் ஆதவன் (22), ஆதம்பாக்கம் பாஸ்கர் (25) ஆகியோர் என்பது தெரிந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த 3 பேரையும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்கு பிறகு 3 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.