மனைவி பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை: மகன் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் தற்கொலை


நாமக்கல்: குடும்ப பிரச்சினை காரணமாக தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அடுத்த அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு பூங்கொடி (50) என்ற மனைவி, சுரேந்திரன் (25) என்ற மகனும் உள்ளனர். சுரேந்திரன் கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன் சுரேந்திரனுக்கு நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடியை சேர்ந்த சினேகா (23) என்ற பெண்ணுடன் நடைபெற்றது.

இந்நிலையில் சுரேந்திரன், சினேகா இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சினேகா, கணவரை பிரிந்து வேட்டாம்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி பிரிந்ததால் சோகமடைந்த சுரேந்திரன் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைகண்ட செல்வராஜ், பூங்கொடியும் மகன் இறந்த துக்கம் தாளாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த எருமப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரது சடலங்களை கைபற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையே மூவரின் விபரீத முடிவுக்கு காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து மூவரின் பிரேதத்தையும் போலீஸார் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக எருமப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக தாய், தந்தை, மகன் மூவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: சுரேந்திரன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தற்கொலைக்கான காரணம் குறித்து சுயமாக வீடியோ ஒன்றை தனது செல்போனில் பதிவு செய்து அதனை கோவையில் உள்ள உறவினர் ஒருவருக்கு வாட்ஸ்-அப்பில் பகிர்ந்துள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர் எருமப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சுரேந்திரன் மட்டுமின்றி அவரது பெற்றோரும் இறந்தது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

x