மதுரை: மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கியதிலும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்த வகையிலும், ரூ.1.63 கோடி வரவு செலவில் முறைகேடு நடந்துள்ளதாக இங்கு பணியாற்றிய சிறைத்துறை எஸ்பி உள்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைக்கைதிகள் எழுதுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைக்கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் பல்வேறு அரசுத்துறைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதில் கிடைக்கும் வருவாய் ஒரு பகுதி சிறைக் கைதிகளுக்கும் ஊதியமாக வழங்கப்படுகிறது.
இதில் பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வெளியில் தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்படுகின்றன. இங்கிருந்து பொருட்கள் அரசுத்துறைகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி கொள்முதல் செய்யும் பொருட்களை உண்மையான சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ததாகவும், குறைவான விலைக்கு விற்ற பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றதாகவும், போலி பில்கள் மூலம் பல கோடியில் ஊழல் முறைகேடு நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் சென்றது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இந்த முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் சென்றது. அதன்படி மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் நவ.30ம் தேதி புகார்கள் அளிக்கப்பட்டது. அதன்படி இன்ஸ்பெக்டர் சூரியகலா டிச.12-ம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். இதில் மத்திய சிறையில் பணியாற்றிய எஸ்பி, கூடுதல் எஸ்பி, நிர்வாக அலுவலர் மற்றும் தனியார் பொருட்கள் விற்பனை செய்த நிறுவனத்தினர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தற்போது கடலூர் சிறைத்துறை எஸ்பி எம்.ஊர்மிளா, பாளையங்கோட்டை கூடுதல் எஸ்பி எஸ்.வசந்த கண்ணன், நிர்வாக அதிகாரி எம்.தியாகராஜன் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்ததாக மதுரையைச் சேர்ந்த ஜபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னை சீனிவாசன், சென்னை சாந்தி, திருநெல்வேலி சங்கரசுப்பு, திருநெல்வேலி தனலெட்சுமி, சென்னை வெங்கடேஸ்வரி ஆகிய 11 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.