சேலம் மத்திய சிறைக்குள் கைதிக்கு கஞ்சா, சிம் கார்டு கொடுத்ததாக வழக்கறிஞர் மீது புகார்


சேலம் மத்திய சிறைச்சாலை (கோப்புப் படம்)

சேலம்: சேலம் மத்திய சிறைக்குள் கைதியை பார்க்கச் சென்று, அங்கு கைதிக்கு கஞ்சா, சிம் கார்டு கொடுத்ததாக வழக்கறிஞர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மத்திய சிறையில், தண்டனை கைதியை பார்க்க வந்த வழக்கறிஞர், கைதியிடம் ரகசியமாக கஞ்சா, சிம் கார்டு ஆகியவற்றை கொடுத்ததாக வழக்கறிஞர் மீது புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் சிறை கைதிகள் மறைத்து வைத்திருந்த 3 செல்போன்கள், சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்த சிறைத்துறையினர், வழக்கறிஞர் மற்றும் 9 கைதிகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

சேலம் அஸ்தம்பட்டியில், சேலம் மத்திய சிறை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளிட்டோர் 700-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளை பார்த்து செல்வதற்கு, அவர்களது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு, உரிய முறையில் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த கச்சா என்கிற அப்சல் (33) வழிப்பறி வழக்கில் கைதாகி, 7 ஆண்டு தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் இருந்து வருகிறார். சேலம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், சேலம் மத்திய சிறைக்குள் சென்று, கைதி கச்சா என்கிற அப்சலை சந்தித்துப் பேசிவிட்டு திரும்பினார்.

இதன் பின்னர், உதவி ஜெயிலர் பாலமுரளி மற்றும் சிறை காவலர்கள் சோதனையிட்டபோது, கைதி அப்சல் தனது உள்ளாடையினுள் 70 கிராம் கஞ்சா, சிம் கார்டு, டேட்டா கேபிள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அப்சலிடம், சிறை கண்காணிப்பாளர் விவேக் விசாரணை நடத்தினார்.

விசாரணை குறித்து சேலம் மத்திய சிறை அதிகாரிகள் கூறியது: “கைதி அப்சலை சந்திக்க வந்த வழக்கறிஞர், அவருக்கு கஞ்சா, சிம் கார்டு, டேட்டா கேபிள் ஆகியவற்றை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக, சிறையினுள் கைதியை வழக்கறிஞர்கள் சந்திக்கும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, வழக்கறிஞர் தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த பொட்டலத்தை, கைதியிடம் ரகசியமாக கொடுத்ததும், அதை பணியில் இருந்த காவலர்கள் பார்க்க முடியாதபடி குணசேகரன் என்ற ஆயுள் கைதி மறைத்து நின்றதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில், கைதி அப்சல் மட்டுமல்லாமல் மேலும் 8 கைதிகளுக்கு இதே வழக்கறிஞர் மூலம் செல்போன்கள், சிம் கார்டுகள், பேட்டரி ஆகியவை சிறைக்குள் ரகசியமாக கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, அந்த வழக்கறிஞர் சிறைக்குள் வந்து சென்ற தேதிகளில் பதிவான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, தகவலை உறுதி செய்தோம். இதனைத் தொடர்ந்து, சிறைக்குள் நடத்திய சோதனையில், கைதிகளிடம் இருந்து 3 செல்போன், பேட்டரி, சிம் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 9 கைதிகள் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் என 10 பேர் மீது ஜெயிலர் குமார் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

x