கோவை: நீலாம்பூர் பகுதியில் பகலில் ஆட்டோ ஓட்டுநராகவும், இரவில் திருட்டிலும் ஈடுபட்ட 3 பேர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த ராகுல்(23) என்பவர், நீலாம்பூர் அருகே நடந்து சென்ற போது, 3 பேர் தன்னை மறித்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சூலூர் போலீஸில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், நீலாம்பூர் அருகேயுள்ள மயிலம்பட்டியைச் சேர்ந்த கணேசன்(40), உதகையைச் சேர்ந்த ரகுநாத்(27), பீளமேட்டைச் சேர்ந்த கார்த்திக்(19) ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மூவரையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, இவர்கள் பகலில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்ததும், இரவில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும், இவர்களிடமிருந்து ஒரு ஆட்டோ, நகை, செல்போன், பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பகலில் ஆட்டோ ஓட்டுநராகவும், இரவில் திருட்டிலும் ஈடுபட்டவர்கள் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.