ராஜபாளையம்: கடன் பிரச்சினையால் மகன், மகளுடன் தம்பதி தற்கொலை முயற்சி - மனைவி உயிரிழப்பு


ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேத்தூரில் மகன், மகளுடன் தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் மனைவி உயிரிழந்த நிலையில், கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (45). இவரது மனைவி முத்துமாரி (35). இவர்களது மகள் குருபிரியா (15) 10-ம் வகுப்பும், மகன் சபரிநாதன் (13) 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கணேசன் ஹோட்டலில் சமையல் மாஸ்டராகவும், முத்துமாரி தையல் வேலையும் செய்து வந்தனர். ஓராண்டுக்கு முன் கணேசன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். மருத்துவ சிகிச்சை மற்றும் குடும்ப செலவுக்காக ரூ.2 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

முத்துமாரி மட்டும் வேலைக்கு சென்று வந்த நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் கணேசன் சிரமப்பட்டு வந்துள்ளார். கடன் பிரச்சினை காரணமாக வெள்ளிக்கிழமை காலை 5 மணி அளவில் விஷம் கலந்த இனிப்பை குழந்தைகளுக்கு கொடுத்து கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டுள்ளனர்.

விஷம் கலந்த இனிப்பை சாப்பிட்ட குழந்தைகள் இருவரும் வாந்தி எடுத்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் குழந்தைகளையும், மயக்க நிலையில் இருந்த கணவன், மனைவி இருவரையும் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் மனைவி முத்துமாரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அதேபோல், கணேசன் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், குரு பிரியா, சபரிநாதன் இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சேத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x