கடலூரில் பதற்றம்: பட்டப்பகலில் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை


கடலூர்: கடலூரில் பட்டப்பகலில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் சிவா நகரை சேர்ந்தவர் ராஜேந்திர குமார் (39). இவருக்கு ரேகா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ராஜேந்திர குமார் கடலூர் வண்டிபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள தண்டபாணி நகரில் குமரன் ட்ரேடர்ஸ் என்ற பெயரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இந்தக் கடையில் மூன்று வாலிபர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இன்று(டிச.12) வழக்கம் போல் கடையை திறந்த ராஜேந்திர குமார் கடையில் வேலை பார்த்த மூன்று வாலிபர்களையும் வேலை விஷயமாக வெளியே அனுப்பியுள்ளார். மேலும், ராஜேந்திர குமார் தொடர்ந்து கடையில் வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற மூன்று வாலிபர்களும் மீண்டும் மதியம் சுமார் 12 மணி அளவில் கடைக்கு வந்துள்ளனர். அப்பொழுது ராஜேந்திரகுமார் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ராஜாராமன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் கதிரவன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் ராஜேந்திரகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து போலீஸார் தண்டபாணி நகர் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரகுமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் கொலை செய்யப்பட்டார ? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

x