கொல்லிமலையில் தம்பதியை கட்டி போட்டு 50 பவுன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை: போலீஸார் விசாரணை


நாமக்கல்: கொல்லிமலையில் தம்பதியினரை கத்தி முனையில் மிரட்டி, கட்டிப் போட்டு விட்டு வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் தேவானூர் நாடு பரியூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கராசு. இவருக்கு பூங்காவனம், சரோஜா என இரு மனைவிகள் உள்ளனர். அவர்களது மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். மகன் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.

நேற்றிரவு வீட்டில் மனைவியுடன் இருந்த தங்கராசை அடையாளம் தெரியாத இருவர் கத்தியை காட்டி மிரட்டி இருவரையும் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கம், 3 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக வாழவந்தி நாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

x