ஆன்லைனில் வேலை வாங்கிக் தருவதாக ரூ.1.8 கோடி மோசடியில் ஈடுபட்ட கேரள இளைஞர் கைது


மதுரை: ஆன்லைனில் வேலை வாங்கித்தருவதாக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரூ. 1.8 கோடி மோசடி செய்த கேரள இளைஞரை மதுரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). ஆன்லைன் மூலம் பணிபுரிய வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி ரூ. 52, 66,417 பல்வேறு வங்கி கணக்கு மூலம் பெற்று சிலர் மோசடி செய்துள்ளதாக இவர் அளித்த புகாரினபேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். குமார் அனுப்பிய கணக்கில் நிலுவையில் இருந்த ரூ.76,52,625 முடக்கப்பட்டது.

இது தொடர்பாக கேரளா காயாம்குளம் நவ்சத் மகன் அன்வார்சா (27), காசர்கோடு அப்சல் முஜீப் முகமது ஆகியோரருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அன்வர்சாவை கைது செய்து அவரிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி புத்தகங்கள், கசோலை, ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்தனர். இவர்கள் டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உபி, மேற்குவங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலும் பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி ரூ.1.8 கோடி மோசடி செய்திருப்பது தெரிந்தது. இவர்களை பிடித்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த பாராட்டினார்.

x