அருப்புக்கோட்டை: பாளையம்பட்டியில் முற்புதரில் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கொத்தனாரை பக்கத்துவீட்டுக்காரரே கொலைசெய்து தீயிட்டு எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை பாளையம்பட்டியில் உடல் எரிந்து எலும்புக்கூடுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர் யார் என்பது குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலைசெய்யப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது அப்பகுதியைச் சேர்ந்த கொத்தனார் மங்கையன் (45) என்பது தெரியவந்தது.
மேலும் கொலையை யார் செய்தார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், மங்கையன் உறவு பெண்ணிடம் அந்த பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (35) என்பவர் பழகி வந்துள்ளார். இதை கண்டித்த மங்கையனிடம், முத்துக்குமார் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முத்துகுமார் மதுபோதையில் மங்கையனிடம் தகராறு செய்துள்ளார்.
அதோடு, கத்தியால் மங்கையனைக் குத்தியுள்ளார். மயங்கி விழுந்த மங்கையனை அருகில் கிடந்த கல்லை எடுத்து அடித்துக் கொலைசெய்துள்ளார். அதன்பின், முற்புதருக்கு சடலத்தை இழுத்துச் சென்று விறகு மற்றும் கட்டைகளைப் போட்டு தீயிட்டு எரித்துள்ளார். அதையடுத்து, முத்துக்குமாரை அருப்புக்கோட்டை நகர் போலீஸார் இன்று கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.