நட்பை பிரித்துவிடுவார்கள் என அச்சம் - கல்லூரி தோழிகள் ஒன்றாக தற்கொலை: அவினாசி அதிர்ச்சி


திருப்பூர்: அவிநாசியில் கல்லூரி படிக்கும் தோழிகள் இருவர் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவிநாசி பழங்கரை லட்சுமி நகரை சேர்ந்தவர் அவந்திகா. கங்கவர் வீதியைச் சேர்ந்தவர் மோனிகா (19). இவர்கள் ஒன்றாக திருமுருகன்பூண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்தனர். இருவரும் பகுதி நேரமாக பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்தும் வந்தனர்.

நேற்று மாலை அவந்திகா வீட்டுக்கு மோனிகா சென்றுள்ளார். அப்போது அவர்கள் வீட்டில் யாரும் இல்லை. அப்போது அவந்திகா மற்றும் மோனிகா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனிடையே பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவந்திகா-வின் தம்பி இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி போலீசார் மாணவிகளின் உடல்களை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஒன்றாக படித்து வந்த அவந்திகா மற்றும் மோனிகா இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக இருந்து படித்தால் சரியாக படிக்கமாட்டீர்கள், எனவே இருவரும் பிரிந்து இருக்குமாறு பெற்றோர்கள் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இவர்கள் இருந்து வந்துள்ளனர். எங்கே தங்கள் நட்பை பிரித்துவிடுவார்களோ என்று பயந்து இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் கூறினர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x