‘டிஜிட்டல் கைது’ - கோவை ஐடி பெண் ஊழியரிடம் ரூ.15.90 லட்சம் மோசடி


உதகை: டிஜிட்டல் கைது எனக் கூறி கோவை ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண்ணை, 8 நாட்கள் தனி அறையில் சிறை வைத்து ரூ.15.90 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சமீப காலமாக அலுவலக உத்தரவின்பேரில், வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டு செல்போன் எண்ணில் இருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது.

மறுமுனையில் இருந்தவர் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி பேசியுள்ளனர். அப்போது, மும்பையில் இருந்து சீனாவுக்கு தனியார் கூரியர் சர்வீஸ் மூலமாக ஒரு பார்சல் செல்கிறது என்றும், அந்த கூரியர் பார்சலில் போதை பொருட்கள், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்டு உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.

சட்ட விரோதமாக போதை பொருட்கள் செல்வதால், உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து செல்போன் அழைப்பை, மும்பை சைபர் கிரைம் போலீஸுக்கு மாற்றுவதாக கூறியுள்ளனர்.

மும்பை சைபர் கிரைம் போலீஸில் இருந்து பேசுவதாக அந்த இளம் பெண்ணிடம் பேசிய மர்ம நபர்கள், ஸ்கைப் வீடியோ கால் அழைப்பில் 24 மணி நேரமும் இணைப்பில் இருக்க வேண்டும் என்றும், உங்களுடைய பெயரை பயன்படுத்தி சட்ட விரோத செயல் நடந்திருப்பதால், உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

மேலும், நாங்கள் கூறும்வரை வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும், அதுவரை வீடியோ அழைப்பு ரெக்கார்ட் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர். அதேபோல், தற்போது நடக்கும் விசாரணை குறித்து குடும்பத்தினர் உட்பட யாரிடமும் கூறக்கூடாது.

அப்போதுதான், இப்பிரச்சினையில் இருந்து உங்களை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த பெண், அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இவர்களுடைய விசாரணை 8 நாட்கள் வரை நீடித்துள்ளது. 8 நாட்களும் அந்த இளம்பெண் வீட்டில் உள்ள தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அந்த சமயங்களில் உணவு, இயற்கை உபாதை, தூக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக மிகவும் அலைக்கழிக்கப்பட்டு அவதிப்பட்டுள்ளார்.

இறுதியாக, உங்கள் கணக்கில் உள்ள பணத்தை விசாரணைக்காக அரசு கணக்குக்கு மாற்ற வேண்டும் என்றும், அந்த பணம் உங்களுடையதான் என்று உறுதியானால்தான் உங்களை காப்பாற்ற முடியும் என்றும் கூறி, குறிப்பிட்ட வங்கி கணக்கு விவரங்களை கொடுத்து அந்த எண்ணுக்கு பணத்தை மாற்றுமாறு கூறியுள்ளனர்.

இதை நம்பி ரூ.15.90 லட்சத்தை மாற்றியுள்ளார். அதன்பின், வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதுடன், மர்ம நபர்களை அந்த இளம்பெண்ணால் மீண்டும் தொடர்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண், உதகை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x