கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகரில் வேனில் ரகசிய அறை அமைத்து 72 ஹான்ஸ் மூட்டைகள் கடத்திய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 2 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் உத்தரவின் பேரில், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் அறிவுரையின் பேரில், ஹான்ஸ், குட்கா, போதை பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் மணிகண்டன், ஸ்ரீதர், ரமணி, பிரகாஷ், கஜேந்திரன், புருஷோத் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று (டிச.11) காலை சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி பாலம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் நின்றிருந்த 2 வேனை சோதனை செய்த போது அதில் ஒரு வேனில் இருந்த ரகசிய அறையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது.
போலீஸார் 2 வேனில் இருந்த 5 பேரை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை சேர்ந்த ஹான்ஸ் மொத்த வியாபாரி முத்தையன் மகன் ஆரோக்கிய ராஜ் (43), பெங்களூருவில் இருந்து ஹான்ஸ் கடத்தி வந்த தருமபுரி, ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பச்சையப்பன் (28), நான்கு சக்கர வாகனத்தில் ஹான்ஸ் வாங்க வந்த வியாபாரி சேத்தியாத்தோப்பு, குமாரகுடியை சேர்ந்த அருள்ராஜ் (32), ஹான்ஸ் வாங்க வந்த மளிகை கடை வியாபாரிகள் சேத்தியாத்தேப்பு அருகே உள்ள எறும்பூரை சேர்ந்த மணிகண்டன் (35), பிரேம்குமார் (22) ஆகியோர் என்று தெரியவந்தது.
போலீஸார் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் 75 மூட்டை ஹான்ஸ் மற்றும் புகையிலைப் பொருட்களையும், 2 நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய தருமபுரி, பெங்களூருவில் இருந்து கடத்தி வர வாகனம் கொடுத்து ஏற்பாடு செய்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த விஜய் (26) என்பதை தேடி வருகின்றனர்.