திருச்சி: திருச்சியில் பரபரப்பாக காணப்படும் சூப்பர் பஜார் பகுதியில் ரயில்வே ஊழியரின் தாயை நகைக்காக கொலை செய்து, உடலை சாக்கு பையில் சுருட்டி குப்பைத் தொட்டி அருகே வீசிச்சென்ற ஜவுளிக் கடை ஊழியரை கோட்டை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவாசியைச் சேர்ந்தவர் கல்யாணி (72). கல்யாணி தனது கணவரின் குடும்ப ஓய்வூதியத் தொகையை எடுப்பதற்காக டிச.8-ம் தேதி மண்ணச்சநல்லூர் வந்தார். பின்னர் அங்கிருந்து திருச்சி கோட்டை பகுதிக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார்.
வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், கல்யாணியின் மகன் வாளாடி ரயில் நிலைய ஊழியர் வனத்தான் அவரை தேடிப் பார்த்தும் கிடைக்காததால், கோட்டை போலீஸில் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கல்யாணியின் உடல் சாக்கு பையில் சுற்றப்பட்ட நியைில், சூப்பர் பஜார் பகுதியில் குப்பைத் தொட்டி அருகே வீசப்பட்டிருந்தது. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அளித்த தகவலின் பேரில் கோட்டை போலீஸார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, அவரது உறவினர்களை வரழைத்து இறந்து கிடப்பது கல்யாணி தான் என்பதை உறுதி செய்தனர்.
கல்யாணி அணிந்திருந்த மூக்குத்தி, தோடு, பணம் ஆகியவை திருடு போயிருந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகை பணத்துக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கோட்டை போலீஸார் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். இதற்காக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், அப்பகுதியில் உள்ள பிரபலமான ரெடிமேட் ஜவுளி கடை ஒன்றில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் காசன் (54) என்பவர் மூதாட்டி கல்யாணியின் உடலை வெள்ளை சாக்குப்பையில் சுற்றி குப்பைத் தொட்டி அருகே வீசியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், மூதாட்டியின் உடலை அவர் தான் வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘இது நகைக்காக நடந்த கொலை என்று முடிவுக்கு வர இயலாது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரிக்கிறோம்.
மேலும் மூதாட்டியின் உடலில் கொலை செய்ததற்கான எந்த கொடுங்காயமும் இல்லை. மூதாட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. எதுவாக இருந்தாலும் மூதாட்டியின் பிரேத பரிசோதன அறிக்கை வந்த பிறகே தெரியவரும்’ என்றனர். பரபரப்பு மிகுந்த சூப்பர் பஜார் பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மாநகர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.