காமராஜர் பல்கலை. தேர்வாணையர் மீது பாலியல் குற்றச்சாட்டு? - முதல்வரின் தனிப் பிரிவுக்கு பெண் அலுவலர் புகார்


மதுரை: மதுரை காமராஜர் பல்கலை. தேர்வாணையருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு கூறி, பாதிக்கப்பட்ட பல்கலை. பெண் அலுவலர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக பல்கலை. பெண் கண்காணிப்பாளர் ஒருவர், இப்பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “இப்பல்கலை தேர்வுத்துறையில கடந்த 15 ஆண்டுக்கு மேலாக பணிபுரிகிறேன். கணவர் இறந்த நிலையில், 2 பிள்ளைகளுடன் வசிக்கிறேன்.

பல்கலை தேர்வாணையர் பொறுப்பில் இருக்கும் தர்மராஜ் என்பவர் என்னை அவரது அறைக்கு தனியாக அழைத்து இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசுவது, விடுமுறை நாட்களில் பணிக்கு வரச் சொல்வது போன்ற செயலில் ஈடுபடுகிறார். மேலும், பிறர் மத்தியில் என்னை மட்டம் தட்டியும், பாலியல் ரீதியில் பலர் முன்னிலையில் என்னை பற்றி பேசியதும் எனது சக ஊழியர்கள் மூலம் எனக்கு தெரியவந்தது. இதை வெளியில் சொன்னால் வேலையைவிட்டு நீக்கி விடுவதாகவும் அவர் மிரட்டுகிறார்.

நவம்பர் மாதம் 4 நாள் ஈட்டிய விடுப்பு எடுத்திருந்தேன். இதை காரணம் காட்டி, கன்வீனர் குழு உறுப்பினர் ஒருவரின் அதிகாரத்தை பயன்படுத்தி வேலையை காலி செய்வதாகக் கூறி தொடர்ந்து மிரட்டுகிறார். அவரது செயலால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி எனது உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தேர்வாணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தேர்வாணையரை தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல் எண் மற்றொரு இணைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.

x