திருச்சி: ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற பெல் பெண் அதிகாரியிடம் ரூ1.61 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு சாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் மனைவி தேவகி (65). இவர் மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த நவ.16-ம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய மர்ம நபர் டிஎச்எல் கொரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார்.
மேலும் சீனாவுக்கு அனுப்ப ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் உங்கள் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆதார் எண்ணில் பெரிய அளவு பண மோசடி நடந்துள்ளது. இதற்கு பெரிய தொகை அபராதம் செலுத்த வேண்டி வரும். நாங்கள் உச்சநீதிமன்றத்தில் உங்கள் அபராத தொகையை செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுத் தருகிறோம் என கூறினார். அதைத் தொடர்ந்து தேவகி தனது வங்கி கணக்கு விவரங்களை மேற்கண்ட மோசடி பேர்வழிக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் உங்களை கைது செய்யாமல் இருக்க உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். அதை நம்பிய தேவகி தனது வங்கி கணக்கில் இருந்த ரூபாய் ஒரு கோடியே 61 லட்சம் பணத்தை அந்த மோசடி பேர்வழியின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக அனுப்பி வைத்தார்.
அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தேவகி அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதைத் தொடர்ந்து தேவகி ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறுகையில், ''அரசு அலுவலராக இருந்த ஒருவருக்கு சைபர் குற்றங்கள் குறித்து அறியாதது எங்களுக்கே ஆச்சர்யமாக உள்ளது. இதுபோன்ற தவறான அழைப்புகள் வந்தால் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவித்தால் பொதுமக்கள் ஏமாறும் முன் குற்றங்கள் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்த முடியும்'' என்றனர்.