தென்காசி: சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் தொழிலாளியை சரமாரியாக வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவ நல்லூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (24). கூலித் தொழிலாளியான இவர், சென்னைக்கு வேலைக்கு செல்வதற்காக நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் ராமச்சந்திரன் என்பவருடன் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றபோது, மர்ம நபர் திடீரென செல்வராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவன் போலீஸார் விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்வராஜை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பிச் சென்ற நபரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், சங்கரன்கோவில், அச்சம்பட்டி ரோடு பகுதியில் நின்ற சந்தேக நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், வாசுதேவ நல்லூரைச் சேர்ந்த கண்ணன் (18) என்பதும், செல்வராஜை வெட்டியது இவர்தான் என்பதும் தெரியவந்தது. செல்வராஜும், கண்ணனும் ஒரே பெண்ணை விரும்பியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், செல்வராஜ் கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னைக்கு செல்ல இருந்த செல்வராஜை நோட்டமிட்டு, ரயிலில் ஏற முயன்றபோது, அவரை கண்ணன் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. பிடிபட்ட கண்ணனை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.