தூத்துக்குடியில் அதிர்ச்சி: நகைக்காக 5 வயது சிறுவன் கடத்தி கொலை


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று 5 வயது சிறுவன் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிறுவன், பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் முருகன். கட்டிட தொழிலாளியான இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியருக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர்.

அதே பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் மணிகண்டன் 7ம் வகுப்பும், கருப்பசாமி 5ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கருப்பசாமிக்கு அம்மை நோய் தாக்கியிருந்ததால் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று டிச.9ம் தேதி திங்கட்கிழமை காலை வழக்கம் போல் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட, மணிகண்டன் பள்ளிக்கு சென்றுள்ளார். வீட்டில் கருப்பசாமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுவன் மாயமாகியுள்ளார்‌. சிறுவனின் பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சிறுவன் கருப்பசாமியைக் காணாததால் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுவனை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை பக்கத்து வீட்டின் மாடியில் சிறுவன் கருப்பசாமி மூச்சுப் பேச்சில்லாமல் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுவனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் இறந்து விட்டதாகவும், சிறுவன் உயிரிழந்து பல மணி நேரம் ஆகி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கருப்பசாமி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியும், விரலில் அணிந்திருந்த ஒரு கிராம் மோதிரமும் காணவில்லை என்று பெற்றோர் தெரிவித்தனர். கருப்பசாமியை நகைகளுக்காக யாராவது கடத்திச் சென்று கொலை செய்து விட்டு மாடியில் போட்டார்களா? அல்லது மரணத்திற்கு வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

x