சென்னை: போலி பாஸ்போர்ட்கள் தயாரித்த ஏஜென்ட்கள் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், ‘இந்திய பயணிகள் சிலர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, போலி இந்திய பாஸ்போர்ட்களை பெற்று, அதன்மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட பயணிகள், அவர்களுக்கு உதவிய ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து போலி கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், மதுரை மாவட்டம் பரசுராமன்பட்டி, சமயநல்லூர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் டிராவல்ஸ் நடத்தி வரும் ஏஜென்ட்களான சதீஷ்குமார் (46), கல்யாண் (40), நல்லாமுகமது (60), நாசர் அலி (47), பவுசல் ரஹ்மான் (29), குமார் (48) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
இவர்களது நிறுவனங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று, ‘பிளாக் லிஸ்ட்டில்’ இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நபர்களை, மீண்டும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக, அவர்களிடம் போலி ஆவணங்களை பெற்று, அதன்மூலம் போலி பாஸ்போர்ட்களை தயாரித்து, விசா ஏற்பாடு செய்து கொடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து, கணினிகள், லேப் டாப், செல்போன்கள், 54 போலி பாஸ்போர்ட்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். போலி பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.