பூந்தமல்லி: மாங்காடு அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்டச்சாலையில் ஆட்டோ கவிழ்ந்து ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார் (26). ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி அர்ச்சனா (25). இவர்களது ஒரு வயது ஆண் குழந்தையான துவாரசேந்துக்கு டிசம்பர் 20ம் தேதி முதல் பிறந்தநாள். அதனை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த நந்தகுமார், விழாவுக்கு உறவினர்களை அழைப்பதற்காக தன் மனைவி அர்ச்சனா, குழந்தையுடன் ஆட்டோவில் திருவள்ளூருக்கு புறப்பட்டார்.
அப்போது, ஆட்டோ, மாங்காடு அருகே மலையம்பாக்கம் பகுதியில் வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி வெளிவட்டச் சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் நந்தகுமாரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுக்குள் சிக்கி காயமடைந்த 3 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேரில், குழந்தை துவாரசேந்த் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து, தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.